மதுரை/தேனி: மதுரை-போடி மீட்டர் கேஜ் ரயில் அகலப் பாதையாக மாற்றும் பணி 2010 டிசம்பரில் தொடங்கியது. முதல் கட்டமாக மதுரை-தேனி அகலப் பாதை பணி நிறைவுற்ற நிலையில், ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை-தேனி வரை பயணிகள் ரயிலை இயக்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தனர். இதைத் தொடர்ந்து, 2 சரக்கு பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் அடங்கிய பயணிகள் ரயிலை இயக்க, தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
மதுரை- தேனி பயணிகள் ரயிலை சென்னையில் இருந்தவாறு பிரதமர் மோடி தொடங்கிவைக்க, மதுரை ரயில் நிலையத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, எம்எல்ஏக்கள் பூமிநாதன், தளபதி உள்ளிட்டோர். படம்: ஆர்.அசோக் இந்நிலையில், மதுரை-தேனி ரயில் சேவை உட்பட பல்வேறு திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்து நேற்று மாலை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இதையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் 6-வது பிளாட்பாரத்தில் தொடக்க விழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, திமுக எம்எல்ஏக்கள் கோ. தளபதி, பூமிநாதன், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், ரயில்வே பொறியாளர்கள், அதிகாரிகள், பாஜக மாநில பொதுச் செயலர் ஆர். னிவாசன், புறநகர் மாவட்ட செயலர் சுசீந்திரன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் பிரதமர் மோடி மதுரை-தேனி ரயில் சேவையை தொடங்கி வைத்த பின், மதுரையில் 6-வது பிளாட்பாரத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலை 6.45 மணிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன் உள்ளிட்டோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் இருந்து தேனிக்கு சென்ற இந்த முதல் ரயிலில் பாஜக மாநிலப் பொதுச் செயலர் ஆர்.னிவாசன், பாஜக விவசாய அணி மாநில துணைத் தலைவர் சசிராமன் உள்ளிட்ட பாஜகவினர், ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள் பயணம் செய்தனர். 8 பெட்டிகளுடன் சென்ற இந்த ரயில் தேனிக்கு சுமார் 8.30 மணிக்கு சென்றடைந்தது.
உசிலம்பட்டி, ஆண்டிபட்டி உட்பட வழி நெடுகிலும் மக்கள் கூடியிருந்து உற்சாகமாக வரவேற்றனர். தேனி ரயில் நிலையத்தில் இந்த ரயிலை ரவீந்திரநாத் எம்.பி., மகாராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்எல்ஏ லாசர், ஆட்சியர் கா.வீ. முரளீதரன், எஸ்பி உமேஷ் டோங்கரோ உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்த கால அட்டவணை யின்படி, இன்று காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து தேனிக்கு புறப்பட்டுச் செல்கிறது. வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டி பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தொடக்க விழாவையொட்டி, முதன்முறையாக தேனி சென்ற ரயிலைப் பார்க்க, மதுரை ரயில் நிலையத்தில் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், அதிமுக உள்ளிட்ட கட்சியினரும் ஏராளமானோர் வந்தனர்.
மதுரை துரைராஜ்: நான் சாதாரண லோடுமேன். பல ஆண்டு களுக்குப் பிறகு மதுரை- தேனிக்கு ரயில் சேவை தொடங்கியது மகிழ்ச்சி. இலவசமாக போகலாம் என்பதால் தேனிக்கு செல்கிறேன். இந்த ரயில் மூலம் இரு மாவட்ட மக்கள் பயன்பெறுவர். தேனியில் இருந்து ஆடு, கோழி உள்ளிட்ட பொருட்களை எளிமையாக மதுரைக்கு கொண்டு வரலாம். வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
மகமு, பிரேமா, ஜனனி: இந்த ரயில் குறிப்பாக அரசு, தனியார் ஊழியர்கள், கல்லூரி மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும். ரயிலில் பாதுகாப்பு அதிகம். தேனி, வைகை அணை போன்ற சுற்றுலாத் தலங்களைப் பார்க்க உதவியாக இருக்கும். கட்டணமும் குறைவு. வருவாயைப் பொறுத்து தினமும் பகலில் இருமுறை என்பது 4 முறையாக இயக்கலாம். வாரத்தில் ஞாயிறு மட்டும் ஓடாது என்கிறார்கள். அன்றைக்கும் இயக்க வேண்டும் என்றனர்.