தமிழக மக்களின் நலனை காக்க 6 கட்சிகளும் இணைந்து செயல்படுவது என தீர்மானித்துள்ளோம் என்று வைகோ தெரிவித்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட் இழந்தார்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயபேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நேற்று சந்தித்தனர். அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து அனைவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவும், திமுகவும் ஓட்டுக்கு பணத்தை வாரி இறைத்தனர். 99 சதவீதம் இடங்களில் இரு கட்சிகளும் பேசி வைத்துக் கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்தனர். ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திருவாரூரில் கருணாநிதிக்கும், கொளத்தூரில் மு.க.ஸ்டாலினுக்கு வீடுவீடாக ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே இந்தியாவிலேயே ஊழலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் இந்தியாவில் எங்கும் நடந்ததில்லை. தேர்தலுக்கு முன் கடைசி 3 நாட்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பத்தை காவல் துறையும், அதிகாரிகளும் தடுக்கவில்லை. இதையும் மீறி எங்களுக்கு விழுந்த ஒவ்வொரு ஓட்டும் ஒரு கோடி பொன்னுக்கு சமம். இந்த விபரீதத்தில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். மக்கள் நலன், தமிழக வாழ்வாதாரம், எதிர்க்கால தலைமுறையின் வாழ்வு, தமிழக மக்களின் மொத்த நலனை காக்க வேண்டும். அதற்காக நாங்கள் 6 கட்சிகளும் இணைந்து செயல்படுவது என தீர்மானித்துள்ளோம்.
தர்மம் நிரந்தரமாக தோற்காது. நெடிய போராட்டத்தில் ஒரு கட்டத்தில் வீழ்ந்துதான் தீரும். இதுதான் இயற்கையின் நீதி. வரலாற்றின் நீதி. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மீண்டும் வெல்லும். காலம் மாறும் என்ற நம்பிக்கையோடு இந்த 6 கட்சிகளும் இணைந்து பணியாற்றுவோம்.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.