மதுரை அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளர் அபிமன்யு. 
தமிழகம்

மதுரை | பாஜக நிர்வாகியை அழைத்து விழா நடத்திய அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாளர் சஸ்பெண்ட்

கி.மகாராஜன்

மதுரை: அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு பாஜக மாவட்ட தலைவரை அழைத்து கண் கண்ணாடி வழங்கியதற்காக மதுரை அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கான இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா பணிமனை அலுவலகத்தில் மே 24-ல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளர் அபிமன்யு தலைமையில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பங்கேற்று தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு இலவச கண் கண்ணாடியை வழங்கினார். அரசுக்கு சொந்தமான அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் நடத்திய நிகழ்விற்கு மக்கள் பிரதிநிதி இல்லாத பாஜக மாவட்டத் தலைவரை அழைத்ததற்கு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கிளை மேலாளர் அபிமன்யு மீது நடவடிக்கை எடுக்க தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்தன. இந்நிலையில், கிளை மேலாளர் அபிமன்யு நேற்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிறப்பித்த உத்தரவில், ''மதுரை பணிமனையில் 24.5.2022-ல் நடைபெற்ற நிகழ்வில் கட்சி பிரமுகர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கண் கண்ணாடி வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் கிளை மேலாளர் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான அரசு பணிமனை விழாவில் கட்சி பிரமுகர்கள் கலந்துகொள்ள அனுமதித்த கிளை மேலாளர் ஏ.அபிமன்யு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்'' எனக் கூறப்பட்டுள்ளது.

மதுரையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நீண்ட காலம் மேலாளராக பணிபுரிந்து வருபவர் அபிமன்யு. இவர் ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இவர் கடந்தாண்டு டிசம்பரில் திருச்சிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் அபிமன்யு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் தனது மகளின் திருமணம் வரை மதுரையில் பணிபுரிய சிறப்பு அனுமதி பெற்றிருந்தார்.

SCROLL FOR NEXT