தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பாக கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

மீளவிட்டான் ரயில்வே மேம்பாலப்பணி ஜூலையில் முடியும்; இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் பணிகள் தொடக்கம்: தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. ஆய்வு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க கடந்த 2014-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. கனிமொழி எம்.பி.இஎஸ்ஐ மருத்துவமனை பணிகளைத் தொடங்க முயற்சிகளை மேற்கொண்டார்.

இதையடுத்து மருத்துவமனை அமைப்பதற்கான அடிப்படை பணிகளை மத்திய தொழிலாளர் நலத்துறை தொடங்கியுள்ளது. இதேபோல் தூத்துக்குடி- மதுரை புறவழிச்சாலையில் மீளவிட்டான் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. இந்த இரு பணிகளையும் கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தூத்துக்குடியில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டப்படவுள்ளது. 100 படுக்கை வசதிகள் கொண்ட இம்மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மத்திய மருந்து விநியோகம் துறை, ரேடியாலஜி பிரிவு, சமையலறை, துணி துவைக்கும் அறை, மருந்தகம், 210 வாகனங்கள் நிற்கும் அளவுக்கான பார்க்கிங் வசதி, பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவை கட்டப்படவுள்ளன. தற்போது மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் கட்டுமானம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மீளவிட்டான் ரயில்வே மேம்பால பணி ரூ.9 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. கிரிடர்கள் எனப்படும் ராட்சத தூண்களை பொறுத்தும் பணிகள் இம்மாத கடைசியில் நடைபெறவுள்ளன.

இதற்காக கொல்கத்தாவில் இருந்து சக்தி வாய்ந்த பளு தூக்கும் இயந்திரம் கடல் வழி மார்க்கமாக கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜூலை மாதத்துக்குள் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என்றார்.

மேயர் ஜெகன் பெரியசாமி, ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT