ராமநாதபுரத்தில் இளைய மன்னர் ராஜா குமரன் சேதுபதியின் உடலுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். 
தமிழகம்

ராமநாதபுரம் இளைய மன்னர் குமரன் சேதுபதி மாரடைப்பால் காலமானார்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் இளைய மன்னரும், ராமேசுவரம் கோயில் தக்காருமான ராஜா என்.குமரன் சேதுபதி (56) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முன்னாள் அமைச்சர் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் பேரனும், ராஜா நாகேந்திர சேதுபதியின் மகனும், ராமநாதபுரம் இளைய மன்னரும், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தக்காருமான ராஜா என்.குமரன் சேதுபதி ராமநாதபுரம் அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் பெங்களூருவில் புகழ்பெற்ற கல்லூரியில் எம்பிஏ படித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு மனைவி ராணி லெட்சுமி நாச்சியார், திருமணமாகாத மகன் நீரஜ் என்ற நாகேந்திர சேதுபதி, திருமணமான மகள் மகாலெட்சுமி நாச்சியார் ஆகியோர் உள்ளனர்.

ராஜா குமரன் சேதுபதி, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தக்காராகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியின் செயலாளராகவும், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்துக் கழகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட டென்னிஸ் கழகத்தின் செயலாளராகவும் இருந்து வந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

மறைந்த குமரன் சேதுபதி, ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தின் பரம்பரை தர்மகர்த்தா ராணி ஆர்பிகே. ராஜேஸ்வரி நாச்சியாரின் சகோதரர் (சித்தப்பா மகன்) ஆவார்.

சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த ஆன்மிக சமுதாயக் கூட்டத்துக்கு அனுப்பிய ராஜா பாஸ்கர சேதுபதி, மறைந்த குமரன் சேதுபதியின் பாட்டனார் ஆவார்.

இளைய மன்னர் குமரன் சேதுபதியின் உடலுக்கு, ராமநாதபுரம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT