தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில், ஏப்.27-ம் தேதி நடைபெற்ற அப்பர் சதய தேர் திருவிழாவின்போது, உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதால் நிகழ்ந்த விபத்தில் 11 பேர் இறந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காக தமிழக அரசு சார்பில், வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து, குமார் ஜெய்ந்த், ஏப்.30-ம் தேதி விபத்து நடந்த களிமேடு கிராமத்துக்குச் சென்று விபத்தில் சிக்கிய தேரை பார்வையிட்டு, கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 19 பேரிடம் நேற்று தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், குமார் ஜெய்ந்த் முன்னிலையில் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டு, கணினியில் பதிவு செய்யப்பட்டது.
பின்னர், குமார் ஜெயந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: களிமேடு தேர் மின் விபத்து குறித்து தற்போது 2-வது முறையாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சை முடிந்து, தற்போது நல்ல நிலைமையில் இருப்பதால், அவர்களிடம் தேர் விபத்து எப்படி நடந்தது? அவர்கள் அப்போது எங்கு இருந்தார்கள் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் கேட்டு பெறப்பட்டுள்ளன.
ஏற்கெனவே அதிகாரிகளிடம் பெறப்பட்ட அறிக்கைகள், தற்போது இவர்களிடம் பெறப்படும் வாக்குமூலம் ஆகியவற்றைக் கொண்டு முழுமையான அறிக்கையைத் தயார் செய்து அரசிடம் ஒப்படைக்கப்படும்.
வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகளையும் அறிக்கையுடன் அளிக்க உள்ளேன் என்றார்.