சேலம்: ஓராண்டுக்கு முன்னரே, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு வரவேற்றார். அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைத்தேன். இந்த ஆண்டு முன்கூட்டியே, டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் முறையாக மே மாதத்தில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் பண வீக்கம் அதிகரித்துள்ளது, ஆனால், தமிழகத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது என பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ந்துவிட்டது என்று உலகுக்கே தெரிந்துவிட்டது. இதனால், தமிழகத்தில் இருந்து வெளியேறிய தொழிற்சாலைகள், மீண்டும் திரும்பி வரத்தொடங்கியுள்ளன.
மத அரசியல் செய்கின்றனர்
ஆட்சிக்கு வர முடியாதவர்கள், ஆட்சியின் மீது குறை சொல்ல முடியாதவர்கள், ஆன்மிகத்தின் பெயரால் அரசியல் செய்கின்றனர். மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள், மதவெறியைத தூண்டி, ஆட்சியின் மீது பொய்யான அவதூறுகளை பேசி வருகின்றனர். எவரது பக்திக்கும், வழிபாட்டுக்கும் நான் தடையாக இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை. பக்திப் பிரச்சாரம் ஒருபுறம் நடக்கட்டும், பகுத்தறிவு பிரச்சாரம் ஒருபுறம் நடக்கும் என்பதுதான் கருணாநிதியின் கொள்கை. ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது.
சேலம் மாவட்டத்துக்கு பல திட்டங்களை பழனிசாமி செய்திருக்க முடியும். ஆனால், அவர் செய்யவில்லை. தினமும் அறிக்கைகளை மட்டும் விடுக்கிறார்.
ஓராண்டுக்கு முன்னரே, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தோம். இதனால், ஏற்பட்ட வருவாய் இழப்பு மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை என்று தான் பார்க்கிறோம். தற்போது, மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9.50 குறைத்துள்ளது. இன்னமும் மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும்.
தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவை ரூ.21,761 கோடி இதுவரை வரவில்லை. நிதி நெருக்கடிக்கு இடையிலும் சாதனைகளைச் செய்துள்ளோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் உறுதியாக நிறைவேற்றுவேன் என்று அண்ணா மீது ஆணையாக சொல்கிறேன். நான் கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும், நான் மறக்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
5.22 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும்
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5.22 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்.
டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 12-ம் தேதி நீர் திறந்துவிடப்படும். நடப்பு ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் முன்கூட்டியே பாசனத்துக்கு நீர் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரைத் திறந்து வைத்தார். மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் மலர்களையும், தானியங்களையும் தூவி முதல்வர் வரவேற்றார்.
முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சிவசங்கர் மற்றும் எம்பி, எம்எல்ஏ-க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.