கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பிய மாணவ, மாணவிகள்.  |  படம் : ஜெ.மனோகரன்.   
தமிழகம்

பாடம் நடத்தாத உதவிப் பேராசிரியரை மாற்றுக: ஆட்சியரிடம் கோவை அரசுக் கல்லூரி மாணவர்கள் புகார்

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் கடந்த ஆறு மாதங்களாக பாடம் நடத்தாத உதவிப் பேராசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் புவியியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பாத்திமா. இந்த புவியியல் துறையில் 350-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் உதவிப் பேராசிரியர் பாத்திமா கல்லூரிக்கு சரிவர வருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாடங்கள் சரிவர நடத்தப்படுவதில்லை என புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட புவியியல் துறையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஏராளமானோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சமாதானப்படுத்தினர். பின்னர், மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அது தொடர்பாக மாணவ, மாணவிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''புவியியல் துறை உதவிப் பேராசிரியர் பாத்திமா கடந்த ஆறு மாதங்களாக சரிவர கல்லூரிக்கு வருவதில்லை. சரிவர பாடங்கள் நடத்தாதன் காரணமாக எங்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. பாடம் நடத்தாத உதவிப் பேராசிரியரை உடனடியாக மாற்ற வேண்டும். வரும் ஜூன் 24-ம் தேதி செமஸ்டர் தேர்வு நடக்க உள்ள நிலையில் விரைவாக புதிய பேராசிரியரை நியமிக்க வேண்டும்'' என்றனர்.

SCROLL FOR NEXT