செல்வேந்திரன், திமுக வின் தேர்தல் பணிக்குழு செய லாளர். 1984-ல் அமெரிக்கா வில் சிகிச்சையில் இருந்தபடியே ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டி யிட்டபோது பெரியகுளம் நாடாளு மன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறக்கப் பட்ட இளைஞர். அவர், தேர்தல் குறித்த தனது நினைவலைகளை கூறினார்.
எங்க தகப்பனார் தந்த 20 ஆயிரத்த கையில் வைச்சுக்கிட்டு அந்தத் தேர்தலை நான் எதிர்கொண்டேன். சாப்பாட்டுப் பொட்டலத்தை கட்டிக்கிட்டுத்தான் ஓட்டு கேட்க புறப்படுவோம். வெயில் ஜாஸ்தி ஆகிவிட்டால், எங்காவது ஒரு மரத்தடியில உட்கார்ந்து சாப்பிட்டு அப்படியே கட்டையை சாச்சிருவோம். வெயில் சாஞ்சதும் பக்கத்துல எங்கயாச்சும் பம்பு செட்டுல போய் குளிச்சிட்டு அடுத்த ஊருக்கு ஓட்டு கேட்டு புறப்படுவோம். அப்பல்லாம் விடிய விடிய ஓட்டு கேட்கலாம்,
ஓட்டுக்குப் பணம் வாங்குறது கவுரவ குறைச்சல்னும் ஊருக்கே அசிங்கம்னு நெனச்ச காலம் அது. அதனால, எங்களுக்கு பெருசா செலவு பிடிக்கல. தேர்தல் முடிஞ்சு ரிசல்ட் வந்தப்ப ஆண்டிபட்டி தொகுதியில எம்.ஜி.ஆரை விடவும் எனக்கு 860 ஓட்டு அதிகமா விழுந்திருந்துச்சு. ‘எம்.ஜி.ஆரை விஞ்சிய அதிமுக வேட்பாளர்’னு பத்திரிகைகள்ல செய்தி போட்டாங்க.
அமெரிக்காவுலருந்து வந்ததும் இதை ஞாபகமா வைச்சிருந்து என்கிட்ட கேட்டார் எம்.ஜி.ஆர். ‘எங்க சாதிக்காரங்க புரியாம பண்ணிட்டாங்க தலைவரே’ன்னு நான் சொன்னதக் கேட்டு சிரித்த அவர், பத்திரிகையாளர்களிடம், ‘என்னை விட என் தம்பிமார்கள் மக்கள் நம்பிக்கையை அதிகம் பெற்றிருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்’ன்னு சொன்னார். எம்பி ஆன பிறகு மதுரையில் எனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைத்தார். திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பிதழ் தந்திருந்தேன். அதை மதித்து அவரும் வாழ்த்து மடல் அனுப்பி இருந்தார். அந்த அரசியல் நாகரிகம் எல்லாம் இப்போது செத்து சுடுகாடு போய்விட்டது.
1999-ல் அதே பெரியகுளம் தொகுதியில் நான் திமுக வேட்பா ளராகவும் டி.டி.வி.தினகரன் அதிமுக வேட்பாளராகவும் போட்டியிட்டோம். அப்பத்தான் மொத்தம் மொத்தமா பணத்தைக் கொண்டாந்து தொகுதிக் குள்ள கொட்டுனாங்க. என்னை தோற்கடித்தது பணம்.
அந்தக் காலத்தில் தேர்தல் ஒரு வசந்த காலமாக இருந்தது. கட்சித் தொண்டனுக்கும் வேட்பாளருக்கும் நெருக்கம் இருந்தது. மக்களின் உண்மையான ஆதரவை, தொண்டனின் உழைப்பை உணர முடிந்தது. ஜனநாயகத்தில் பணநாயகம் ஒடுக்கப்படாவிட்டால் ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் தேர்தல் மாத்திரமல்ல, அரசியலே எட்டாக் கனியாகிவிடும் என்றார்.