சென்னை: மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான மேதா பட்கர், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது, தொழிலாளி கண்ணையா தீக்குளித்து இறந்துள்ளார். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
நாடு முழுவதுமே ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை இடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். நகர மேம்பாடு என்பது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எனவே, ஏழை மக்களின் வீடுகளை இடிப்பதை நிறுத்த வேண்டும்.
தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்த கூடாது. தமிழக அரசு உருவாக்கியுள்ள 3 சட்டத் தொகுப்புகளுக்கான வரைவு விதிகளை தமிழில் வெளியிட வேண்டும். இதுதொடர்பாக மண்டல அளவில் கூட்டம் நடத்தி, மக்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.