தமிழகம்

நாங்கள் 3-வது அணி அல்ல.. முதல் அணி: கருணாநிதிக்கு சுதாகர் ரெட்டி பதில்

செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் இது முக்கியமான தேர்தல். நீடிக்காது என்று சொல்லப்பட்ட மக்கள் நலக் கூட்டணி தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளுடன் வலுவாக உள்ளது. திமுக, அதிமுக ஆட்சிகளால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. அந்தக் கட்சிகளை தமிழக மக்கள் நிராகரிக்க வேண்டும். 3-வது அணி என்ற ஒன்று கண்ணுக்கே தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். நாங்கள் 3-வது அணியல்ல, நாங்கள்தான் முதல் அணி. தமிழக மக்களின் வளர்ச்சியையும், எதிர் பார்ப்புகளையும் சிதைத்த திமுக, அதிமுகவை வீழ்த்தவே இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம்.

ஜெயலலிதாவுக்கு பயம் வந்துள்ளதால் அதிமுக தேர்தல் அறிக்கையில் பல இலவசங்களை அறிவித்துள்ளார். ஓட்டுக்காக ரூ.500 கொடுக்கிறார்கள் என்றால் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரத்தை உங்களிடம் இருந்து சுரண்டுவார்கள். பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.

திமுகவும், அதிமுகவும் தங்க ளுக்கு சாதகமான ஊடகங்கள் மூலம் கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன. தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைக்கும். எங்கள் தலைமை யில் கூட்டணி அமைக்கிற சூழல் இப்போது இல்லை. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சி களையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்திய பிறகு எங்கள் தலைமையில் கூட்டணி அமைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT