பாஜக தேர்தல் பிரச்சார பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. பிரச்சார பாடல்கள் அடங்கிய குறுந்தகடை முரளிதர ராவ் வெளியிட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண் டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முரளிதர ராவ் கூறியதாவது:
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதாக வும், மின்மிகை மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார்.
மத்தியில் பாஜக அரசு பதவியேற்பதற்கு முன்பு தமிழகத்தில் பல மணி நேரம் மின்வெட்டு இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதையும் இணைக்கும் மின் பாதை, நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு, சூரியசக்தி மின் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவற்றால் நாட்டில் எங்கும் மின்வெட்டு இல்லை. மத்திய அரசின் சாதனைக்கு முதல்வர் ஜெயலலிதா சொந்தம் கொண்டாடி வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தொடங்கப்பட்டு, முடிக்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள், வழங்கப்பட்ட புதிய மின் இணைப்புகள் ஆகியவை குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்து விவாதிக்க பாஜக தயாராக உள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கும். பிரதமர் மோடியின் பிரச்சாரத்தால் பாஜக குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெறும். புதிய வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.