தமிழகம்

12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை - தேனி இடையே மீண்டும் ரயில் சேவை: மே 26-ல் சென்னையில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

என்.சன்னாசி

12 ஆண்டுகளுக்கு பிறகு மே 26-ம் தேதி மதுரை - தேனி இடையே ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளது. பிரதமர் மோடி சென்னையில் இருந்தவாறு காணொலி மூலம் தொடங்கி வைக் கிறார்.

1928-ல் ஆங்கிலேயர் ஆட்சியில் கேரள பகுதியில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட நறுமணப் பொருட்களின் வர்த்தகத்துக்காக போடி-மதுரை இடையே ரயில் இயக்கப்பட்டது.

போடி, தேனி, ஆண்டிபட்டி, மதுரை, உசிலம்பட்டி, கருமாத் தூர், செக்கானூரணி பகுதி மக்கள், மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்களுக்கு இந்த ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்தது.

மேலும் ஏலக்காய், பழங்கள், காய்கறிகள் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்ற 2010 டிசம்பரில் மதுரை- போடி ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

ரூ.450 கோடி செலவிலான மதுரை- போடி அகல ரயில்பாதை திட்டத்தில், தேனி வரை அனைத்து பணிகளும் தற்போது முடிவடைந் துள்ளன.

2020-ல் மதுரை - உசிலம்பட்டி இடையிலான 37 கி.மீ. தூர ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரனும், பின்னர் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி இடை யிலான 21 கி.மீ. பாதையை ரயில்வே உயர் அதிகாரி அபய் குமார் ராயும் ஆய்வு செய்தனர்.

ஆண்டிபட்டி - தேனி 17 கி.மீ. துாரத்தை கடந்த மார்ச்சில் ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா 3 மாதத்துக்குள் மதுரை-தேனி இடையே ரயில் சேவையை தொடங்க அனுமதி அளித்தார்.

தற்போது மே 26-ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் மதுரை- தேனி ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கவிருப்பதால் 2 மாவட்ட மக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘ தேனி - போடி இடையே 15 கி.மீ. பணி நடக்கிறது. விரைவில் அப்பணியும் முடிந்துவிடும்.

மேலும் மதுரை - போடிக்கு விரைவில் மின்சார ரயில் இயக்க அனுமதியும் கிடைத்துள்ளது. மின் மயமாக்கல் பணி விரைவில் தொடங்க இருக்கிறது" என்றனர்.

SCROLL FOR NEXT