தமிழகம்

கோவையில் சிறுமிக்கு திருமணம் பெற்றோர் உட்பட 4 பேர் கைது

செய்திப்பிரிவு

கோவையில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக அச்சிறுமியின் பெற்றோர் உட்பட 4 பேரை குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ராமநாதபுரம் போலீஸார் கூறியதாவது:

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (26). இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அச் சிறுமிக்கு, ராஜேஷ் என்பவருக்கும் கடந்த ஏப்.19-ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த அச்சிறுமி, தனக்கு நடத்தப்பட்ட குழந்தைத் திருமணம் குறித்து சைல்டுலைன் உதவி எண்ணில் தெரிவித்தார். அந்த தகவலின் பேரில், சைல்டுலைன் நிர்வாகி சுலேகா ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், சிறுமி கர்ப்பமாக இருப்பதும், அவருக்கு சட்டவிரோதமாக குழந்தைத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதும் தெரிந்தது.

இதைத் தொடர்ந்து சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போஸ்கோ) மற்றும் குழந்தைத் திருமணம் தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து திருமணம் செய்த ராஜேஷ், சிறுமியின் பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT