காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை, தேர்தல் பார்வையாளர்களிடம் பொதுமக்கள் நேரடியாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 28-ம் தேதி முதல் தேர்தல் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் புகார்களைத் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரடியாக தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, சோழிங்கநல்லூர் சென்னை பெருநகராட்சி மண்டல அலுவலகம்(15)-ல் காலை 10.30 முதல் 11.30 வரை, ஆலந்தூர் சென்னை பெருநகராட்சி மண்டல அலுவலகம்(12)-ல் பிற்பகல் 12.30 முதல் 1.30 வரையில் அத்தொகுதியின் பார்வையாளர் ஷ்யாம் சுந்தர் சர்மாவிடம் தெரிவிக்கலாம். பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை, பல்லாவரம் நகராட்சி அலுவலகம் குரோம்பேட்டையில் காலை 11 முதல் 12 மணி வரை தேர்தல் பார்வையாளர் லால் தவுமாவ்யாவிடம் புகார் தெரிவிக்கலாம்.
தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு தொகுதிகளுக்கு, மாநில ஊரக வளர்ச்சி நிறுவன விருந்தினர் இல்லம், மறைமலை நகரில் மாலை 5 முதல் இரவு 7 மணிவரை தேர்தல் பார்வையாளர் அபா கான்ஷியிடம் புகார்கள் தெரிவிக்கலாம். திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பகல் 3 மணி முதல் 4 மணி வரையிலும், செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 முதல் 12 மணி வரையில் தேர்தல் பார்வையாளர் அரூப் குமார் சாகாவிடம் புகார்களைத் தெரிவிக்கலாம்.
மதுராந்தகம், உத்திரமேரூர் தொகுதிகளுக்கு அரசு விருந்தினர் மாளிகை, பாலுசெட்டி சத்திரத்தில் தேர்தல் பார்வையாளர் பிரிஜ்ராஜ் ராயிடம் புகார்களை கூறலாம்.
காஞ்சிபுரம் தொகுதிக்கு அரசு சுற்றுலா மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாலை 4 முதல் 6 மணி வரை புகார்களை தெரிவிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்
ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தினமும் காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஆவடி ரயில் நிலையம் அருகே உள்ள தாலுகா அலுவலகத்தில் இருப்பார்.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான புகார்களை இவரிடம் நேரில் தெரிவிக்கலாம். மேலும், 9445398610 மற்றும் 8902001070 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை கூறலாம் என்று ஆவடி தொகுதி தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.