செம்மர கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய திமுக ஒன்றிய செயலாளரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கரகாட்ட பெண் கலைஞர் மோகனாம்பாள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி தாராபடவேடு பகுதியில் கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள் என்பவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் போலீஸார் கடந்த மாதம் திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம், 73 பவுன் நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மோகனாம்பாள் தனது சகோதரி நிர்மலாவுடன் கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, 3 நாட்கள் காவலில் வைத்து மோகனாம்பாளிடம் காட்பாடி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது அக்காள் நிர்மலாவின் மகன் சரவணனுக்கு செம்மர கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் மூலம் கிடைத்த பணத்தை வட்டித் தொழிலில் முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அணைக்கட்டு திமுக ஒன்றிய செயலாளர் பாபு என்பவர்தான் சரவணனை செம்மரம் கடத்தல் தொழிலில் ஈடுபட வைத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
மோகனாம்பாள் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் பாபுவை காவலில் எடுத்து விசாரணை நடத்த காட்பாடி போலீஸார் முடிவு செய்தனர். பாபுவை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு காட்பாடி நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன்னிலையில் ஆய்வாளர் ராமச்சந்திரன் புதன்கிழமை மனு ஒன்றை தாக்கல் செய்தாரர்.
சமீபத்தில், வேலூர் அருகே கத்தி முனையில் பணம் பறிக்க முயன்ற வழக்கில் பாபு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். வேலூர் சிறையில் இருந்த திமுக ஒன்றிய செயலாளர் பாபு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாபுவை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிபதி சுஜாதா அனுமதி அளித்தார். வெள்ளிக்கிழமை மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவரிடம் காட்பாடி போலீஸார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். மோகனாம்பாள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாபுவை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தும் சம்பவம் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.