அன்புமணி வெற்றிக்காக அவரது மனைவி சவுமியா பென்னாகரத்திலேயே தங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தருமபுரி மாவட்டம் பென்னா கரம் சட்டப்பேரவைத் தொகுதி யில் பாமகவின் முதல்வர் வேட் பாளர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர், பென்னாகரம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தொகுதியில் வேட்பாளர் தினந்தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்ற குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவரது மனைவி சவுமியா தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக, பென்னா கரம் - ஒகேனக்கல் சாலையில் மடம் பகுதியில் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டை வாடகைக்கு பெற்று அதில் அன்புமணி, சவுமியா ஆகியோர் தங்கியுள்ளனர். அன்புமணி வெளியூர்களுக்குச் சென்று விடும் நாட்களிலும்கூட சவுமியா பென்னாகரம் தொகுதி முழுக்க பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றி பாமகவினர் சிலரிடம் கேட்டபோது, ‘‘பென்னாகரம் தொகுதியில் சுமார் 2.25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்களில் சுமார் 2 லட்சம் வாக்காளர்களை 2 முறையாவது நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது திட்டம். தன் கணவரின் வெற்றிக்காக அவர் தினமும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்’’ என்றனர்.