தமிழகம்

திருவெறும்பூரில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவு திரட்டிய உதயநிதி

செய்திப்பிரிவு

திமுக பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதி, திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திமுக நிர்வாகிகளை சந்தித்து, வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழிக்கு நேற்று ஆதரவு திரட்டினார்.

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளரான மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். மேலும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு நேற்று வந்த உதயநிதி, தனது நண்பரான மகேஷ் பொய்யாமொழி போட்டியிடும் திருவெறும்பூர் தொகுதிக்குச் சென்று, கள நிலவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், திமுக ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, “திருவெறும்பூர் தொகுதியில் நானே நிற்பதாகக் கருதி, தேர்தல் பணியாற்றி, மகேஷ் பொய்யாமொழியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று திமுக நிர்வாகிகளிடம் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து, அரியமங்கலம் திடீர் நகரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த மகேஷ் பொய்யாமொழியை, உதயநிதியும், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் நேரில் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT