அதிமுகவின் தேர்தல் அறிக்கையால், திமுக மரண பயத்தில் உள்ளதாக கிருஷ்ணகிரியில் நடிகை விந்தியா பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மது, கிருஷ்ணகிரி வேட்பாளர் கோவிந்தராஜ் ஆகியோரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என காத்திருந்த திமுக, இப்போது எதுக்குடா தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள் என மரண பயத்தில் உள்ளது. திமுக 500 வாக்குறுதிகள் இல்லை, 5 ஆயிரம் வாக்குறுதிகள் அளித்தாலும் வெற்றி பெற போவதில்லை.
தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு 3 ஜி, 2 ஜி வசதியுடன் சேர்த்து இலவச லேப்டாப் தருவார்களாம். அவர்கள் செய்த 2 ஜியையே நாம் இன்னும் மறக்கவில்லை. அதற்குள் 3 ஜி, 4 ஜி என போய்விட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கை தேறாத தேர்தல் அறிக்கை. தேர்தல் அறிக்கை குறித்து ஸ்டாலின் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக உள்ளாரா?.
அதிமுக கொள்கையுள்ள கூடாரமாக உள்ளது. திமுக கொள்ளையடிக்கும் கூடாரமாக உள்ளது. அதிமுகவில் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் கட்சிக்கு உழைத்தவர்களாக உள்ளனர். ஆனால் திமுகவில் கேஸ் (பணம்) உள்ளவர்கள் மற்றும் நீதிமன்றத்தில் கேஸ் (வழக்கு) உள்ளவர்களாக இருக்கின்றனர். இந்த சட்டப்பேரவை தேர்தலுடன் மக்கள் நலக்கூட்டணி, பாமக உள்ளிட்ட கட்சிகள் காணாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் பேசினார்.