தமிழகம்

முகத்தில் பாலிதீன் பையை கட்டி மூச்சு திணறவைத்து மனைவி கொலை - ‘ஆசை’ சினிமா பாணியில் கொடூரம்: தப்பிய கணவனுக்கு வலை

செய்திப்பிரிவு

‘ஆசை’ திரைப்படத்தில் வருவது போல, சென்னையைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது மனைவியின் முகத்தை பாலிதீன் பையால் கட்டி மூச்சு திணறவைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப் பேட்டை ஆவூர் முத்தையா தெருவை சேர்ந்தவர் மோகன் (45). தனியார் பள்ளி வாகன டிரைவர். இவரது மனைவி ஷோபனா (27). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வெளியே புறப்பட்டார் மோகன். அவரது சித்தி மலர் என்பவர் அருகே வசிக்கிறார். மோகன் வெளியே செல்வதைப் பார்த்த மலர், ‘‘எங்கே போகிறாய்? ஷோபனா எங்கே?’’ என கேட்டுள்ளார். ‘‘ஷோபனா, அம்மா வீட்டுக்கு போயிருக்கிறார். எனக்கு வெளியே வேலை இருக்கிறது’’ என்று கூறிவிட்டு மோகன் வெளியே சென்றுவிட்டார்.

பூட்டிய வீட்டில் துர்நாற்றம்

அதன் பிறகு, 2 நாட்களாக வீடு பூட்டியே இருந்துள்ளது. உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்த மலர், மோகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனடியாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். போலீஸார் வந்து கதவை உடைத்து திறந்தனர். உள்ளே பாலிதீன் பையால் முகம் சுற்றப்பட்டிருந்த நிலையில் ஷோபனா இறந்து கிடந்தார். உடலை போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

அடித்ததில் மயங்கி விழுந்தார்

மோகன் ஷோபனா இடையே செவ்வாய்க்கிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மோகன் அடித்ததில் எதிர்பாராதவிதமாக மயங்கி கீழே விழுந்துள்ளார் ஷோபனா.

‘ஆசை’ திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் தனது மனைவி ரோகிணியை வித்தியாசமான முறையில் கொலை செய்வார். மயக்க மருந்து கொடுத்து, அவர் மயங்கி விழுந்ததும் முகத்தில் பாலிதீன் பையால் மூடி இறுக்கிக் கட்டிவிடுவார். சில நிமிடங்களில் ரோகிணி மூச்சு திணறி இறந்துவிடுவார்.

கை, கால்களை கட்டி..

இதுபோலவே, ஜவுளிக் கடை பிளாஸ்டிக் கவரை ஷோபனாவின் முகத்தில் மூடி இறுக்கிக் கட்டியுள் ளார் மோகன். மயக்கத்தில் இருந்த மனைவியின் கை, கால்களை யும் இறுக்கிக் கட்டினார்.

பின்னர், ஷோபனாவின் மயக்கம் தெளிந்தது. முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றியிருந்ததால் மூச்சு விட முடியாமல் திணறினார். கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதை அகற்றவும் முடியவில்லை. சிறிது நேரத்தில் மூச்சு திணறி பரிதாபமாக இறந்துவிட்டார். மனைவி இறந்ததை உறுதிசெய்து கொண்ட பிறகு, அங்கிருந்து மோகன் தப்பிவிட்டார்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் மோகனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT