தமிழகம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்காக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் உதகையில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக முருகன், நளினி உட்பட 7 பேர் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த உத்தரவு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

பேரறிவாளன் விடுதலையை அடுத்து முருகன், நளினி உட்பட 6 பேர் விடுதலை தொடர்பாக சென்னையில் உள்ள சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உதகையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் முதல்வருடன், நீலகிரி எம்.பி ஆ.ராசா உடனிருந்தார்.

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அரசு தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறையில் உள்ள முருகன், நளினி உட்பட 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT