திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் குறைந்த அளவு தமிழக மாணவர்களே நுழைவுத்தேர்வு எழுதுவதால்தான், தமிழக மாணவர்களின் சேர்க்கையும் குறைவாக உள்ளது என துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் திருவிக அரசு கலைக் கல்லூரியின் 36-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பங்கேற்று, இளங்கலை, முதுகலை மற்றும் முதுகலை நிறைஞர் பட்டம்பெற்ற 1,145 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நாடு முழுவதும்உள்ள 48 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசியின் அறிவுறுத்தல்படி ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் நாடு முழுவதுமிருந்தும் மாணவர்கள் வந்து படிக்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மாதிரியான பாடத் திட்டங்கள் உள்ளதால், அவற்றை ஒருங்கிணைக்கவே நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மேலும், 48 பல்கலைக்கழகங்களுக்கும் ஒரேமாதிரியான நுழைவுத்தேர்வு மற்றும் பாடத்திட்டம் உள்ளதால், மாணவர்கள் எந்தப் பல்கலைக்கழகத்துக்கும் சென்று படிக்கலாம். திருவாரூர்மத்திய பல்கலைக்கழகத்தில் 30% தமிழ் மாணவர்கள் மட்டுமேபயின்று வருகின்றனர். குறைந்த அளவு தமிழக மாணவர்களே நுழைவுத்தேர்வு எழுதுவதால்தான், தமிழக மாணவர்களின் சேர்க்கையும் குறைவாக உள்ளது.
மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்கின்ற நடைமுறையைகொண்டு வந்துள்ளேன். தேசியகல்விக்கொள்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தமிழ்நாடு மத்தியபல்கலைக்கழகத்துக்கு தமிழகஆளுநர் மே 27-ம் தேதி வருகிறார். இதேபோல, மே 28-ம் தேதிமத்திய கல்வித் துறை இணை அமைச்சர் வருகிறார் என்றார்.