மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு கோரி, சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று வந்த அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர்.படம்: ம.பிரபு 
தமிழகம்

நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர் - மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக, பாமக ஆதரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக, பாமக ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 3 இடங்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை திமுக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ஒரு இடத்தைகாங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

அதிமுக சார்பில் 2 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. ஒரு உறுப்பினர் வெற்றி பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதிமுக 2 இடங்களில் வெற்றி பெற மொத்தம் 68 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால் அதிமுகவிடம் 66 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

மேலும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவிடம் 4 எம்எல்ஏக்கள் உள்ளதால், பாஜகவின் ஆதரவைப் பெற அதிமுக முடிவு செய்துள்ளது.

அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்ட ஆதரவு கோரும் கடிதத்துடன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோர் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலதலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை நேற்று சந்தித்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற அண்ணாமலை, அதிமுகவுக்கு பாஜகவின் முழு ஆதரவு உண்டு என்று உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே, பாமகவிடம் 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக நிர்வாகிகள் குழு நேற்று காலை திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசினர்.

அப்போது மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எழுதிய கடிதத்தை ராமதாஸிடம் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், ‘அதிமுகவின் கோரிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் நடத்திய கலந்தாய்வில், மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT