தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் ‘ட்ரோன்’ பறக்கவிட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்த வனத்துறையினர். 
தமிழகம்

பாலக்கோடு அருகே கிராமத்தில் நடமாடும் சிறுத்தையை ‘ட்ரோன்’ மூலம் வனத்துறை கண்காணிப்பு

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நடமாடுவது குட்டி ஈன்ற சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பாலக்கோடு வட்டம் வாழைத்தோட்டம் கிராமத்தில் வனத்தை ஒட்டிய விளைநிலத்தில் இரவில் சிறுத்தை ஒன்று நடமாடு வது கண்காணிப்பு கேமராவில் அண்மையில் பதிவானது. வாழைத்தோட்டம், காவேரியப்பன் கொட்டாய் உள்ளிட்ட அப்பகுதி கிராமங்களில் கடந்த சில வாரங்களில் 52 கோழிகள் மாய மானது. அதேபோல, 5 ஆடுகள் மர்ம விலங்கால் கொல்லப்பட்டிருந்தது.

திருடர்களா?

கோழிகள் மாயமாவதன் பின்னணியில் யாரேனும் திருடர்கள் இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் பதிவான கண்காணிப்புக் கேமரா காட்சி மூலம் கோழி, ஆடுகளை வேட்டையாடி வந்தது சிறுத்தை என உறுதியானது. இதைத்தொடர்ந்து சிறுத்தையால் கிராம மக்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் தலைமையிலான வனத்துறை யினர் தொடர் கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் சிறுத்தை நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஒருவார கால கண்காணிப்புப் பணியின்போது பகல் நேரத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தை காண முடியவில்லை.

‘ட்ரோன்’ கண்காணிப்பு

எனவே, பகலில் வனத்தின் உட்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறதா என அறிய குறிப்பிட்ட பகுதிகளில் வனத்துறையினர் ‘ட்ரோன்’ கேமரா பறக்க விட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால், ட்ரோன் கேமராவின் மூலமும் சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய முடியவில்லை. இருப்பினும், சிறுத்தை நடமாடிய கிராமப் பகுதிகளில் வனத்துறையினரின் கண்காணிப்புப் பணி தொடர்கிறது.

குட்டி ஈன்ற சிறுத்தையா?

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘பொதுவாக சிறுத்தைகள் ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் நிலையாக இருப்பதில்லை. பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் பகுதி யில் நடமாடிய சிறுத்தை பெண் சிறுத்தையாக இருக்கலாம் என கருதுகிறோம். அதிலும் குட்டி ஈன்ற பெண் சிறுத்தையாக இருக்கலாம். இவ்வாறு அல்லாத சிறுத்தைகளும் கூட வேறு சில பிரத்யேக காரணங்களுக்காக ஒரே பகுதியில் குறிப்பிட்ட காலம் நிலையாக தங்கியிருக்கவும் வாய்ப்புள்ளது.

அந்த சிறுத்தையால் கிராம மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வனத்துறை கண்காணிப்புப் பணியை தொடர்ந்து வருகிறது’ என்றனர்.

SCROLL FOR NEXT