சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை பூவிருந்தவல்லியில் மே 18 தின எழுச்சி மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: சரணடைந்து வாழ்வதைவிட சண்டையிட்டு சாவது மேல் என்ற கோட்பாட்டின்படி வாழ்ந்தவர் பிரபாகரன். போரை சிங்கள அரசு திணிப்பதனால், பெரும் பொருளாதார, அரசியல் சிக்கல் நேரிடும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் பதிவு செய்துள்ளார்.
பன்னாட்டுப் படைகள் சுற்றி நின்றபோதும், தன் மக்களை விட்டு விலகாமல் போரிட்ட பிரபாகரன் எங்கே? சொந்த நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்தபோது ஓடி ஒளிந்த ராஜபக்சே எங்கே? ‘பிரபாகரன் இருந்திருக்கலாம்' என்று சிங்களவர்களே சொல்லும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
திடீரென பாஜகவுக்கு ஈழத் தமிழர்கள் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வந்து வாழும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.
பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சியைவிட, நம்பிக்கையைத் தருகிறது. இந்த தீர்ப்பு, சிறையில் உள்ள மற்றவர்களுக்கும் பொருந்தும். எனவே, அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.
மாட்டுக் கறி சாப்பிட தடை விதிப்பவர்கள், மாட்டுக் கறி ஏற்றுமதியைக் கைவிடுவார்களா?
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். அதேபோல, எனது பாஸ்போர்ட் மீதான தடையையும் நீக்க வேண்டும். பாஜகதான் நாம் தமிழர் கட்சியின் `பி' டீமாக செயல்பட்டு வருகிறது.
திராவிட மாடல் என்று பேசி வரும் முதல்வர், தமிழ்நாட்டை `திராவிட நாடு' என்று பெயர் மாற்றம் செய்வாரா? நான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். 2026-ல் நாம் தமிழர் அரசை மலரச் செய்வோம். இவ்வாறு சீமான் பேசினார்.
மகிந்தா ராஜபக்சவுக்கு மத்திய அரசு அடைக்கலமும் கொடுக்கக் கூடாது. 7 பேரை விடுதலை செய்யும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்து போடாமல் மூன்று ஆண்டுகள் காலம் தாழ்த்திய தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.