கீழப்பார்த்திபனூரில் உள்ள சிவன் கோயில் சுவர் அருகே தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர். 
தமிழகம்

பரமக்குடி அருகே 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் புனரமைப்பு பணி தொடக்கம்

செய்திப்பிரிவு

பரமக்குடி: பரமக்குடி அருகே கீழப்பார்த்திபனூரில் மண்ணில் புதைந்துள்ள கி.பி. 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பட்டீஸ்வரமுடைய அய்யனார் கோயிலை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் கீழப்பார்த்திபனூர் கிராமத்தில் பட்டீஸ்வரமுடைய அய்யனார் கோயில் (சிவன் கோயில்) அமைந்துள்ளது. இக்கோயில் கி.பி. 13 அல்லது 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடைபெறுகிறது.

கோயிலின் அருகே உள்ள தார்ச்சாலை 6 அடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கோயிலின் அடித்தளம் பூமிக்குள் புதைந் துள்ளது. இக்கோயிலில் திருப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக கோயிலின் புதைந்த அடித்தளத்தை சீரமைக்கும் பணி நடக்கிறது. அதற்காக கோயில் சுவர் அருகே 5 முதல் 8 அடி வரை பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை அறநிலையத் துறை பரமக்குடி ஆய்வாளர் முருகானந்தம் ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், மிகவும் பழமையான இக்கோயிலை தொல்லியல் துறை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அடுத்த கட்டமாக கட்டுமானப் பணிகளை மேற் கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT