கோவை சாய்பாபாகாலனி ராமலிங்க நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பேராசிரியர் ராமு (69). தனியார் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த சில ஆண்டுகளாக பீளமேடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். தனியே வசித்து வந்த இவர், கடந்த மாதம் 5-ம் தேதி, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
ராமுவின் சகோதரர் திருமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சாய்பாபாகாலனி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் லட்சுமி மேற்பார்வையில், உதவி ஆணையர் ரமேஷ்கிருஷ்ணன், ஆய்வாளர்கள் மணிமொழி, சந்திரசேகரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.
அதில், கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மனோகர் (எ) சரவணன் (45) என்பவருக்கு இக் கொலையில் தொடர்பிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால், அவர் தலைமறைவாக இருந்ததால் திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சென்னை, கேரளம் உள்ளிட்ட பல இடங்களில் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருப் பதையறிந்த மனோகர், கடந்த 20-ம் தேதி கோவை வந்தார். ஆனால் அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்த தனிப்படை போலீஸார், சோமசுந்தரா மில் ரயில் பாலம் அருகே அவரை சுற்றி வளைத்தனர். அப்போது தப்பியோட முயன்ற அவர் கீழே விழுந்து காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரிடம் விசாரணை நடைபெற்றது.
அதில், பேராசிரியர் கொலையில் மனோகருக்கு தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்த போலீஸார், அவரிடமிருந்த நகைகளைக் கைப்பற்றியதோடு, ஜெஎம்7 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
செல்போன் எண் மூலம் ....
தனிப்படை போலீஸார் கூறியதாவது: பேராசிரியர் ராமுவுக்கு முத்துச்சாமி என்பவர் உணவு வாங்கிக் கொடுப்பது போன்ற உதவிகளைச் செய்து வந்திருக்கிறார். முத்துச்சாமியும் அவரது உறவினரான மனோகரும், ராமுவின் வீட்டில் வெள்ளையடித்துக் கொடுத்துள்ளனர். அப்போது வீட்டில் நகைகள் இருப்பதையறிந்து, பின்னர் நேரம் பார்த்து மனோகர் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், சென்னையில் பல வருடங்கள் இருந்திருக்கிறார். அங்கு சித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டு, பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 2008-க்குப் பின் கோவைக்கு வந்து, செல்வி என்பவரை 2-ம் திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கோவையிலும் பல்வேறு குற்ற வழக்குகளில் இவருக்கு தொடர்பிருக்கிறது. 12 வழிப்பறி, 3 கூட்டுக் கொள்ளை வழக்குகள் இவர் மீது உள்ளன. 2 முறை குண்டர் சட்டத்திலும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றிருக்கிறார். இவரது கூட்டாளியாக இருந்த முக்கியக் குற்றவாளி ஒருவர் சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இப்படி பல்வேறு வழக்குகளில் மனோகருக்கு தொடர்புள்ளது.
மனோகரின் ஒரு வருட செல்போன் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்தபோது பெங்களூரில் இருந்துகொண்டு போலி சிம் கார்டு வாங்கி, அதிலிருந்து கோவையிலுள்ள மனைவியிடம் பேசியது தெரியவந்தது.
அந்த தொலைபேசி எண்ணை தொடர்ந்து கண்காணித்தபோது கடந்த 17-ம் தேதி அந்த எண் ஈரோட்டிலும், பின்னர் கோவைக்கும் வந்தது தெரியவந்தது. அதன் பிறகே அவரைத் தேடி பிடித்தோம். சென்னையில் பதிவான வழக்குகள் தொடர்பாக விசாரிக்க விரைவில் சென்னை போலீஸார் கோவை வர உள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.