தமிழகம்

விசாரணை முதல் விடுதலை வரை: பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து நேற்று தீர்ப்பளித்தது. இதன்படி கடந்த 1991-ல் பேரறிவாளனை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றது முதல் 2022-ல் விடுதலை செய்யப்பட்டது வரை இந்த வழக்கு கடந்து வந்த பாதை வருமாறு:

1991 மே 21-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

1991 ஜூன் மாதம் பேரறிவாளனை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு வயது 19, பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம்சாட்டப்பட்டது.

1998 பேரறிவாளன் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய 25 பேருக்கு மரண தண்டனை விதித்து, வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1999 மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் விடுவிக்கப்பட்டனர். பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2014 பிப்ரவரி மாதம் பேரறிவாளன் மற்றும் மற்ற 3பேர் அனுப்பிய கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் தாமதப்படுத்தியதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி, பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

2015 டிசம்பரில் அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பினார்.

2016 மார்ச் மாதம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

2017 நவம்பரில் பேரறிவாளனுக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிபிஐயின் முன்னாள் விசாரணை அதிகாரி தியாகராஜன் தெரிவித்தார்.

2018 ஏப்ரலில் தமிழக அரசின் கருத்துருவை மத்திய அரசு நிராகரித்தது.

2018 செப்டம்பரில் அதிமுக ஆட்சியில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2021 ஜூன் மாதம் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் , தனது மகனை நிரந்தரமாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.

2022 மார்ச் மாதம் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில், அவருக்கு முதல் முறையாக ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2022 மே 11-ம் தேதி இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்காக தள்ளிவைத்திருந்தது.

2022 மே 18-ல் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

SCROLL FOR NEXT