திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் ‘கிருபானந்த வாரியாருக்கு ஏற்பட்ட கதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஏற்படும்’ எனப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர்தனபாலன் கண்டனம் தெரிவித்துஉள்ளார்.
திண்டுக்கல்லில் திமுக சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘தமிழகத்தில் தேவையின்றி கலவரத்தை தூண்டும் வகையில் அண்ணாமலை பேசுவாரானால் அவரை எப்படி அடக்க வேண்டும் என திமுக தொண்டனுக்குத் தெரியும்.
1969-ல் அண்ணா மறைந்தபோது நெய்வேலியில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கிருபானந்த வாரியார் முன்னாள் முதல்வர் அண்ணா பற்றி தனக்கே உரிய கிண்டலான பாணியில் பேசினார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் கிருபானந்த வாரியாருக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அண்ணாவை பற்றி பேசிய கிருபானந்த வாரியாருக்கு என்ன கதி ஏற்பட்டதோ, கருணாநிதியை பற்றி கேவலமாக பேசினாலும் அதே கதிதான் ஏற்படும். பழைய திமுகக்காரன் வந்துவிடுவான் என்பதைஎச்சரிக்கையாக அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எங்குமே கூட்டம் பேசமுடியாது’ என பேசினார்.
இதுகுறித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ஜி.தனபாலன் கூறியதாவது: ஆர்.எஸ்.பாரதி பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது.
சென்னை கமலாலயத்தில் இருந்தபடி, வாய்ப்பு இருந்தால் என்னை கைது செய்யலாம் என சவால் விட்டவர் அண்ணாமலை. ஆனால் அவர் மீது எந்த வழக்கும் போடப்படவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரையில் உண்மையை பேசக் கூடியவர். திமுக செய்யக்கூடிய அத்தனை தவறுகளையும் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியாக திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆர்.எஸ்.பாரதி வயது முதிர்வின் காரணமாக தொடர்பில்லாத பேச்சுகளை பேசுகிறார். இதுபோன்று மிரட்டும் தொனியில் பேசுவதால்பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது. இன்னமும் தீவிரமாக திமுகவின் முறைகேடுகளை மக்களுக்கு சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பார் என்றார்.