சென்னை: திருவள்ளூர் பொன்னேரியை சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ``தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்கு முறை சட்டப்படி அதிகாலை ஒரு மணி முதல் காலை 9 மணி வரை காட்சிகள் திரையிடக் கூடாது.
ஆனால், இதை மீறி சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதிக கட்டணம் வசூலித்து, மக்களிடம் கொள்ளையடிப்பதுடன், வரி ஏய்ப்பும் செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, சட்ட விதிகளை அமல்படுத்த உத்தரவிட்டு, விதிகளை மீறி படங்கள் திரையிடுவதை தடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ``இந்த விவகாரத்தில் சட்ட விதிமீறல் இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசும், காவல் துறையும் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.