புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது இரண்டரை ஆண்டு காலம் முடிவெடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை ஏற்க முடியாது என்று பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் குமணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் கூறியது: "தமிழக முதல்வர் இந்த விடுதலை விவகாரத்தில் தொடக்கம் முதலே அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அதனடிப்படையில் முதல்வர் எடுத்த விடாமுயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.
இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ன் படி தமிழக அமைச்சரவை ஒரு முடிவெடுத்தது என்றால், அந்த முடிவு மாநிலத்தின் ஆளுநருக்கு கட்டுப்பட்டதுதான். அமைச்சரவையின் முடிவு தனக்கு கட்டுப்படாதது என்று ஆளுநர் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் மீது கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கால தாமதம், தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் இருந்தது சட்ட விரோதமானது. எனவே, அளுநர் முடிவெடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை ஏற்க முடியாது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ன் படி பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.