சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை வேண்டும் என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் நேற்று தெரிவித்துள்ளதாவது: விஜயகாந்த்: பஞ்சு விலை கடந்த ஓரண்டில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதனுடன் இறக்குமதிசெய்யப்படும் பருத்தியை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி நூல்விலையும் ஏற்றப்பட்டுவிட்டதால் ஜவுளி உற்பத்தி தொழில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
பருத்தி பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோதுமையை போல பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தால் தட்டுப்பாடு ஏற்படாது.
இந்த விவகாரத்தில் மத்திய,மாநில அரசுகள் உடனே தலையிட்டு நூல் உற்பத்தியாளர்கள், விசைத்தறி சங்கங்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு குழுஅமைத்து நூல் விலை உயர்வைகட்டுப்படுத்த வேண்டும்.
ஜி.கே.வாசன்: ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், ‘பருத்தி ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும், பருத்தியை அத்தியாவசியப் பொருள் பட்டியலில் கொண்டுவரவேண்டும், செயற்கையாக பருத்தியை பதுக்கி வைக்கும்முயற்சியை தடுக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளனர். நாளுக்கு நாள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க, பருத்தி, நூல் விலையைக் குறைக்க, உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நலன் காக்க சலுகைகளை வழங்கவும், சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்தவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.