சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே கவுரிப்பட்டி ஊராட்சியில் அருகருகே உள்ள திருவேலங்குடி, காரம்பட்டி கிராமங்களில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரைப் படிக்கும் 50 குழந்தைகள் இருந்தும் பள்ளி இல்லை.
இதனால் அவர்கள் 5 கி.மீ.,-ல்உள்ள காளையார்மங்கலம், 4 கி.மீ.ல் உள்ள நாட்டரசன்கோட்டையில் படித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி இல்லாததால் அவர்கள் தினமும் நடந்தும், சரக்கு வாகனங்களிலும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அரசு விதிப்படி 25 மாணவர்கள் இருந்தாலே தொடக்கப் பள்ளி தொடங்கலாம். ஆனால், பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
திருவேலங்குடியில் தொடக்கப்பள்ளி தொடங்கக் கோரி 2010-ம்ஆண்டு கிராம மக்கள் சார்பில் சிவகங்கை ஆட்சியரிடம் மனுஅளிக்கப்பட்டது. மேலும், மக்கள்தொடர்ந்து வலியுறுத்திய போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதைக் கண்டித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி கோயிலில் தஞ்சமடைந்தனர். ஆனால், கிராமத்தில் அரசு நிலம் இல்லை, தொகுதி எம்எல்ஏ பரிந்துரைக் கடிதம் கொடுக்கவில்லை எனக்கூறி பள்ளி தொடங்காமல் இருந்தனர்.
தனியார் சார்பில் 60 சென்ட் இடம்
இதுகுறித்து இந்து தமிழ் திசைநாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு சிவகங்கை தொகுதிஎம்எல்ஏ செந்தில்நாதன் பரிந்துரைக் கடிதம் கொடுத்தார். மேலும்தனியார் சார்பில் 60 சென்ட் இடம்பள்ளிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்பிறகும் பள்ளி தொடங்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டிவந்தனர்.
ஊராட்சித் தலைவர் சண்முகம், துணைத் தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் பள்ளி தொடங்கக் கோரி மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவையடுத்து வரும் கல்வியாண்டில் தற்காலிகமாக திருவேலங்குடி மகளிர் மையக் கட்டிடத்தில் பள்ளிதிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. 12 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
காளையார்கோவில் வட்டாரக் கல்வி அலுவலர் சகாயசெல்வன் கூறுகையில், ‘ பள்ளியைத் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிட்டன. விடுமுறை முடிந்ததும் திருவேலங்குடியில் தொடக்கப் பள்ளி திறக்கப்படும்’ என்றார்.