விருதுநகர் பெரியவள்ளிக் குளத்தில் உள்ள நோபில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று எஸ்எஸ்எல்சி அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர் ஆர்.சிவக்குமார் 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவரது தந்தை ரகுபதி விருதுநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உதவியாளராக பணிபுரிகிறார். தாய் விஜயலட்சுமி. மாணவர் ஆர்.சிவக்குமார் தமிழ் பாடத்தில் 99 மதிப் பெண், மற்ற அனைத்துப் பாடங்களிலும் தலா 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவர் ஆர்.சிவக்குமார் கூறியதாவது:
இந்த வெற்றிக்கு எனது பெற்றோரும், ஆசிரியர்களும் முக்கிய காரணம். வகுப்பில் ஆசிரியர்கள் அடிக்கடி தேர்வு நடத்தியதால் சந்தேகங்களை அப்போதே தீர்த்துக்கொள்ள முடிந்தது. எங்கள் வீட்டில் டிவி இல்லை, திரைப்படம் பார்ப்பதில்லை, கணினி இல்லை. முக்கியமாக ‘டச்’ செல்போன் இல்லை. இதனால், படிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்த முடிந்தது. எனது நண்பர்களும் நன்கு படிக்கக் கூடியவர்களாக இருந் ததால் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ள முடிந்தது.
வீட்டில் ஹால், படுக்கை அறை, உணவருந்தும் அறை சுவர்களில் எல்லாம் மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும் என்று எழுதி வைத்திருப்பேன். இதை அடிக்கடி பார்க்கும் போது இன்னும் நன்றாக படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்.
தினமும் காலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன். அதேபோன்று பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் இரவு வெகுநேரம் படிக்கும் பழக்கம் உண்டு. படித்ததை பிழையில்லாமல் எழுதிப் பார்த்ததால்தான் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. மேலும், எனது பெற்றோர் எனக்கு எந்த மன அழுத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. அடிக்கடி படி, படி என்று வற்புறுத்தவில்லை. ஆனால், முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று முழு நம்பிக்கை கொடுத்தனர். 11-ம் வகுப்பில் வணிகவியல் படித்து பின்னர் சி.ஏ படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.