சென்னை: எழுத்தாளர் சுப்பு எழுதிய ‘திராவிடமாயை’ புத்தக வெளியிட்டு விழா, சென்னை மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபாவில் நேற்று நடந்தது. தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:
திராவிட மாயை என்பது உடைந்துவிட்டது. குழப்பங்கள் அனைத்தும் நிறைந்து இருக்கக் கூடிய கூடாரமாக திராவிடகொள்கை இருக்கிறது. 2019-ம் ஆண்டு626 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக தகவல் பெறும் உரிமைசட்டத்தில் தெரியவந்தது. அதில், திருவாரூரில்தான் அதிகமாக 158 கிராமங்களில்தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதுதெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரின் மாவட்டம். இதை மாயை என்று சொல்லவில்லை என்றால் எதை மாயை என்று சொல்வீர்கள். தமிழகத்தில் ஆணவ கொலைகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சாதி குறையவில்லை. என்ன நடந்தாலும் உரிமை கொண்டாடுவதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என்று கூறி வருகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்க செயல்.
தமிழகத்தில் நல்ல அற்புதமான சூழல் நமக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். இது மிக ஆரோக்கியமான விஷயம். 2026-ம் ஆண்டு தமிழகத்தின் மைல் கல்லாக இருக்கப் போகிறது. நிறைய பேர் தேசியத்தின் பக்கம் வர ஆரம்பித்துவிட்டனர். 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.