சென்னை: "கல்லூரி மாணவர்கள் பிரச்சினைகளை அவர்களது படிப்பு பாதிக்கக்கூடும் என்பதால் இதுவரை மென்மையாக கையாண்டோம். இனிமேல் பிரச்சினைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள்" என்று சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான பிரச்சினை, ரூட் தல பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவடுதாக ஒரு தகவல் வந்துகொண்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரி, புதுக் கல்லூரி மற்றும் சைதாப்பேட்டையில் என நேற்று மட்டும் சென்னையில் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த மூன்று சம்பவங்களிலும் தவறு, கல்லூரி மாணவர்கள் மேல்தான் உள்ளது.
அரசுப் பேருந்து நடத்துநர்கள், மாணவர்களிடம் தாளம் போட வேண்டாம், ஆட வேண்டாம் என்று மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக உள்ளது என்று அறிவுறுத்துகின்றனர். அதைக் கேட்டு மாணவர்கள் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். அதனை மீறுவதால் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இதற்கு முன்புவரை, கல்லூரி மாணவர்களின் படிப்பு பாதிக்கக்கூடும் என்பதால், மென்மையாக கையாண்டோம். இனிமேல் அப்படியிருக்காது, இதுவொரு எச்சரிக்கை போன்றதுதான். தொடர்ச்சியாக இதுபோன்ற புகார்கள் வந்தால், மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.