சென்னை: "அண்மையில் உதய்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நாட்டில் என்ன நடக்கிறது, பொருளாதாரம் எந்தளவில் இருக்கிறது, அரசாங்கம் என்ன செய்து கொண்டுள்ளது என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவாக விளக்கி கூறினார். இதை தாங்கிக் கொள்ளாமல் மத்திய அரசு, சிபிஐ-யை அனுப்பி சோதனை நடத்துகின்றனர். எனவே, இது பழிவாங்கும் நடவடிக்கை" என்று காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் தற்போது டெல்லியில் இருப்பதாகத் தெரிகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் 5 மணி நேரமாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சிபிஐ சோதனை நடந்துவரும் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிற்கு வந்த காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "எந்தக் காரணத்திற்காக சோதனை நடத்துகிறீர்கள்? ஏற்கெனவே பலமுறை சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை என பல அமைப்புகள் மூலம் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடத்துவதற்கு எந்த அரசியல் அமைப்பு சட்டங்கள் வழிவகை செய்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்படுகிறது. எத்தனை முறை சோதனை நடத்த முடியும்?
ஏற்கெனவே அனைத்து சோதனைகளும் முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்ற நிலையில் இன்று வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் எல்லாவற்றையும் மூத்த வழக்கறிஞராக இருக்கக்கூடிய ப.சிதம்பரம் முறியடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது உதய்பூரில் நடந்த மாநாட்டில் பேசிய ப.சிதம்பரம், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார். பொருளாதாரம் எந்தளவில் இருக்கிறது, அரசாங்கம் என்ன செய்து கொண்டுள்ளது என்பது குறித்தும் பேசியிருந்தார். இதை தாங்கிக் கொள்ளாமல், சிபிஐ அனுப்பி சோதனை செய்கின்றனர்.
இது பழிவாங்கும் நடவடிக்கை. எதற்காக இந்த சோதனை. தற்போது நாங்கள் ஆட்சியிலும் இல்லை, பதவியிலும் இல்லை. எதற்காக இந்த சோதனை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த சோதனை குறித்து அதிகாரிகளிடம் கேட்கும்போது, இது சாதரண சோதனைதான் என்றும், ஒரு புகார் உள்ளதாகவும் கூறுகின்றனர்" என்று அவர் கூறினார்.