தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், ''தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும். அதே சமயம் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
வெப்பச் சலனம் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் தளியில் 10 செ.மீட்டர் மழையும், கிருஷ்ணகிரி, ஓசூரில் 5 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக வேலூர், திருத்தணியில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.