சென்னை: மாற்றுத் திறனாளிகள் 100 நாள்வேலை திட்டத்தில் 4 மணி நேரம்வேலை செய்தாலே முழு ஊதியம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின் கீழ்மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவமான வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, திறன்சாரா உடல் உழைப்பை மேற்கொள்ள விருப்பம் உடையவயது வந்தோரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பணித் தளத்தில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்குதல், குழந்தைகளை பராமரித்தல், மற்றும் சிறு வேலைகளான பணித்தளத்தில் அகற்றப்பட்ட இலை, தழைகள், சிறு மரங்களை அப்புறப்படுத்துதல், கரைகளை சமன்படுத்துதல் போன்ற பணிகள் மட்டுமே செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இத்தகைய தனித்துவமான செயல்பாட்டை மத்திய அரசு பாராட்டியதுடன், இதரமாநிலங்களும் பின்பற்றி செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
தகுதியுடைய அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் நீல நிறவேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 2 கி.மீ. தூரத்துக்குள் மட்டுமே வேலை வழங்குவதுடன், வேலைக்கான ஊதியம், குறிப்பிட்டுள்ள 15 நாட்களுக்குள் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக தாமதமின்றி வழங்கப்படுகிறது. மாநிலஅரசின் சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவர்களுக்கு வேலையும், குறித்த காலத்தில் ஊதியத்தை வழங்குவதும் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.