முகமது ரேலா 
தமிழகம்

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை அமைப்பின் சர்வதேச தலைவராக முகமது ரேலா நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது ரேலா நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கான கல்வி, ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைப்பாக `ஐஎல்டிஎஸ்' விளங்கி வருகிறது. இதுவரை ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க மருத்துவர்களே அதன் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் முகமது ரேலாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மற்றும் கணைய அறுவைசிகிச்சை தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

கின்னஸ் சாதனை

மேலும், 5,000-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டுள்ள அவர், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “சர்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை தொடர்பான ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து, ஆலோசனைகளை பரிமாறிக்கொள்ளவும், பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்யவும், உதவித்தொகைகள் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்னும் பல நாடுகளில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் செய்யப்படுவதில்லை. முறையான தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி ஆகியவை அங்கு இல்லை. அந்தக் குறையை நிவர்த்தி முயற்சி செய்வேன்” என்றார்.

SCROLL FOR NEXT