கரூர்: பருத்தி நூல் விலையைக் குறைக்க வலியுறுத்தி கரூரில் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று (மே 16) கவன ஈர்ப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
கரூர் மாவட்டத்தில் 400 ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 400 உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், 150 நூல் விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், 50 டையிங் மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகள், 500-க்கும் மேற்பட்ட சிறு தையல் நிறுவனங்கள், 500-க்கும் மேற்பட்ட ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர் வீவிங் நிட்டிங் (Knitting) ஓனர்ஸ் அசோசியேஷன், கரூர் ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம், கரூர் நூல் வர்த்தகர் சங்கம் ஆகிய சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
வேலை நிறுத்தம் காரணமாக கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்களும் இன்று (மே 16) மூடப்பட்டிருந்தன. இதனால் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.100 கோடி ஜவுளி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஒரு நாள் வேலைநிறுத்ததில் மட்டும் ஈடுபடும் நிலையில் மற்ற நிறுவனங்கள் 2-வது நாளாக நாளையும் (மே 17) வேலை நிறுத்தத்தைத் தொடர முடிவு செய்துள்ளன.