‘அசானி’ புயலால் சேதமடைந்து கடலில் திசைமாறிய சுனாமி முன்னெச்சரிக்கை மிதவை கருவியை இந்தியக் கடலோர காவல் படையினர் கண்டுபிடித்து மீட்டனர். 
தமிழகம்

புயலால் கடலில் திசைமாறிய சுனாமி தகவல் தரும் கருவி மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை: அசானி புயலால் சேதம் அடைந்து கடலில் திசைமாறிய தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் சுனாமி, கடல் வானிலை குறித்த தகவல்களை தெரிவிக்கும் கருவியை, இந்திய கடலோர காவல்படை கண்டுபிடித்து மீட்டது.

சுனாமி, கடல் வானிலை குறித்த தகவல்களை, சாட்டிலைட் மூலமாக தெரிவிக்கும் கருவியை, சென்னைக் கடற்கரையின் கிழக்குப் பகுதியில் 225 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஓடி) மிதக்க விட்டிருந்தது.

இதில் ஒரு மிதவை கருவி, அண்மையில் வீசிய ‘அசானி’ புயலால் சேதமடைந்து கடலில் திசைமாறியது. இதுகுறித்து, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்தியத்துக்கு தகவல் தெரிவித்தது.

இதையடுத்து, சென்னையின் கிழக்கு கடல் பகுதியில் 278 கடல் மைல் தொலைவில் மிதந்து கொண்டிருந்த மிதவை கருவியை, இந்திய கடலோர காவல்படையின் ‘ஷானக்’ ரோந்துக் கப்பல் கண்டுப்பிடித்து மீட்டு சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வந்தது.

இந்த மிதவை கருவியில் சென்சார், ஜிபிஎஸ் கருவி, ஒளிரும் விளக்கு, சாட்டிலைட் தகவல் பரிமாற்றம் மற்றும் சிக்னல் பெறுதல் ஆகிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை சுனாமி, புயல் போன்ற சமயங்களில் கடல் மற்றும் வானிலை குறித்த தகவல்களை அளிக்கும். மீட்கப்பட்ட மிதவை கருவி, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது என பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT