காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியின் 22-வது வார்டு திருக்காலிமேடு அருகே அமைந்துள்ள அலாபாத் ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நத்தப்பேட்டை ஏரி, மஞ்சள் நீர் கால்வாயிலிருந்து அலாபாத் ஏரிக்கு தண்ணீர் செல்லும் நிலை இருந்தது. ஏரியின் நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் தற்போது ஏரிக்கு நீர் வரத்து இல்லை.
ஆனால், மழைக் காலங்களில் மட்டும் ஏரியில் ஆங்காங்கே சிறிதளவு தண்ணீர் தேங்கி நிற்கும். ஏரியில் கருவேல மரங்கள் உட்பட ஏராளமான மரங்கள் அடர்ந்து வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. இந்நிலையில், அலாபாத் ஏரியில் கடந்த 2016-ம் ஆண்டு 2 புள்ளி மான்கள் சுற்றித் திரிவதை அப்பகுதி மக்கள் முதன்முதலாக பார்த்தனர்.
தற்போது, ஏரியில் மான்கள் இனப்பெருக்கம் செய்து குட்டிகளுடன் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. அதனால், மான்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கவும் இங்குள்ள இயற்கை சூழலைப் பாதுகாக்கவும் வனவிலங்குகள் வாழும் பகுதி என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகள் மற்றும் மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “அலாபாத் ஏரியில் மான்கள் இனப்பெருக்கம் செய்து கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதனால், வன விலங்குகளுக்கு ஏற்ற இயற்கை சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம். ஆனால், மாநகராட்சி ஊழியர்கள் ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால், ஏரியின் இயற்கை சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும், கரையில் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலான செயல்கள் அதிகம் நடைபெறுகின்றன. அதனால், சுற்றுப்புற பொதுமக்களிடம் வன விலங்குகளின் வாழ்விடம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அறிவிப்புப் பலகைகளை அமைக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட வனத் துறை அலுவலர் சத்தியமூர்த்தி கூறும்போது, “காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் மான்கள் வசிக்கின்றன. அலாபாத் ஏரியில் மான்கள் அதிகமாக வசிப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மான்களுக்கு இடையூறும், பாதிப்பும் ஏற்படாத வகையில், ஏரிக்கரைகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், குப்பை கொட்டுவதை தடுத்து, கரைகளில் விழிப்புணர்வு பலகைகள் மற்றும் மரக்கன்றுகளை நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.