தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும், பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலரும், சுயேச்சை வேட்பாளருமான பிரபாகரன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, எலச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (29). பவர்லூம் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இவர் ஏற்கெனவே திருப்பூர் பகுதிகளில் நடைபெற்ற மணல் கொள்ளைகளுக்கு எதிராக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நீதிமன்றத்தை நாடியவர். தொடர்ந்து போராடியதற்காக கொலை மிரட்டல் வந்ததால், இவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி, கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் 8 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அண்மையில் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி அவிநாசியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமும் இவரது தலைமையில் நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
இது குறித்து பிரபாகரன் கூறும்போது, ‘ஐந்தாண்டு கால மக்களின் வாழ்வை தீர்மானிக்கும் சக்தியாக பணமும், மதுவும் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகிறது. தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் செலவு செய்ய அனுமதித்துள்ளது. ஆனால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தேர்தல் முடியும் வரை அனைத்து மதுக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் மாதம் 5-ம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை எவ்வித பதிலும் இல்லை. இதையடுத்து கடந்த 25-ம் தேதி நினைவூட்டல் கடிதமும் அனுப்பியுள்ளேன். அதற்கும் இதுவரை பதில் இல்லை.
எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளேன்’ என்றார்.