இந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ள 1,500 கோயில்கள் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள திருவுடையம்மன் - திருமணங்கீஸ்வரர் கோயில், பழவேற்காட்டில் உள்ள தேவி பூதேவி சமேத ஆதிநாராயணப் பெருமாள் கோயில், திருப்பாலைவனத்தில் உள்ள லோகாம்பிகை உடனுறை பாலீஸ்வரர் ஆகிய கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: இந்தஆண்டு சுமார் 1,500 கோயில்கள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில்திருப்பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறைமுடிவெடுத்துள்ளது. அது மட்டுமின்றி, 1,500 கிராமப்புற கோயில்கள், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,250கோயில்கள் என்று கணக்கிடப்பட்டு, கோயிலுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து திருப்பணிகளை மேற்கொள்ள உள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள 200 சிறிய கோயில்களில் இந்த ஆண்டு ரூ.25 கோடி செலவில் திருப்பணிகளை மேற்கொள்ள முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.
மீஞ்சூர் திருவுடையம்மன் - திருமணங்கீஸ்வரர் கோயில் சோழர் கால கட்டடக்கலையைச் சேர்ந்தது. இக்கோயிலில் உள்ளமடப்பள்ளி, நந்தவனம், ராஜகோபுரம், நவகிரகக் கோயில் ஆகியவற்றில் பராமரிப்புப் பணிகள் மேம்படுத்தப்படும்.
பழவேற்காடு தேவி, பூதேவி சமேத ஆதிநாராயணப் பெருமாள் கோயில் 1,000 ஆண்டுகள் தொன்மையானது. ஒரு கால பூஜைத் திட்டம் இக்கோயிலில் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 40 வருடங்களுக்கு மேலாகிறது. இக்கோயில் 1,000 ஆண்டுகள் தொன்மையான கோயில் திருப்பணி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
தொன்மை மாறாமல் திருப்பணி மேற்கொள்வதற்கு ஸ்தபதிஆய்வறிக்கை பெற்று செயல்படுத்துதல், கோயில் நிலத்தை குத்தகைக்கு விட நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், ஆணையர் ஜெ.குமரகுருபரன், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.எஸ். கோவிந்தராஜன், மீஞ்சூர் ஒன்றியக் குழுத் தலைவர் ரவி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் உதய சூரியன், வேலூர் மண்டல இணை ஆணையர் லெட்சுமணன், உதவி ஆணையர் சித்ரா தேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.