தமிழகம்

மண்ணுக்குப் போகும் விழிகளை மனிதருக்கு பெற்றுத்தரும் மாமனிதர்: கண் தான சேவையில் சாதிக்கும் கண் கணேஷ்

குள.சண்முகசுந்தரம்

‘‘விருதுகள் எனக்கு பெரிதாக தெரியவில்லை. என்னால் பார்வை பெற்ற ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களின் வாழ்த்து கிடைத்திருக்கிறதே, அதைத்தான் மிகப்பெரிய விருதாக கருதுகிறேன்’’ நெகிழ்வுடன் சொல்கிறார் ‘கண்' கணேஷ்.

சிவகாசியைச் சேர்ந்த கணேஷ், பிரபல பட்டாசு கம்பெனியின் டீலர். பட்டாசு நகர் அரிமா சங்கத்தின் பட்டய தலைவராக இருக்கும் இவர், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட ஐந்து மாவட்ட அரிமா சங்கங்களின் கண் தான தலைவராகவும் இருக்கிறார். தனது ‘கண்’ணான சேவை பற்றி அவரே விவரிக்கிறார்...

இந்தியாவில் கருவிழி பாதிப்பால் பார்வை இழந்தவர்கள் 68 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஆனால், கண் தானம் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. ‘இறந்த பிறகு கண்களை கொடுத்துவிட்டால் சொர்க் கத்தில் போய் எப்படி பார்க்க முடியும்’ என்று கேட்கிற அளவுக்கு மக்களிடம் அறியாமை மண்டிக் கிடக்கிறது. நம்மால் முடிந்த அளவு இந்த அறியாமையைப் போக்கி கண் தானத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக 8 வருடங்களுக்கு முன்பு களமிறங்கினேன்.

தொடக்கத்தில் சர்ச், கோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்க ளில் போய் பிரச்சாரம் செய்தேன். அங்கெல்லாம் என் பேச்சை யாருமே கேட்கவில்லை. அதற்காக மனம் தளரவில்லை. பிரச்சாரத்தை மாணவர்கள் பக்கம் திருப்பினேன். அதற்கு பலன் கிடைத்தது. ஒரே ஆண் டில் 48 பேர் கண் தானம் செய்தனர். இதுதான் சரியான வழி என நினைத்து, நேரடியாக கல்லூரிகளுக்குப் போய் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டேன். ஒவ் வொரு கல்லூரியிலும் 3 மணி நேரம் எனது பிரச்சாரம் இருக்கும்.

தொடக்கத்தில், சினிமா பிரபலங் களிடம் கண் தானம் குறித்து நான் எடுத்த பேட்டிகள் திரையில் ஓடும். ‘இதை கவனமாக பாருங்கள். இதிலி ருந்து 52 கேள்விகள் கேட்பேன். ஒவ்வொரு கேள்விக்கும் நூறு ரூபாய் மதிப்பிலான பரிசு உண்டு’ என முன்கூட்டியே சொல்லி விடுவதால் கவனமாக வீடியோவைப் பார்ப்பார்கள். 52 கேள்விகளுக்கும் அவர்களுக்கு பதில் தெரிந்துவிட்டால் கண் தானத்தின் முக்கியத்துவத்தை அவர்களும் உணர்ந்துவிடுவார்கள்.

இப்படி இதுவரை தமிழகம் மற்றும் கேரளத்தில் 1,189 பள்ளி, கல்லூரி களில் பிரச்சாரம் செய்திருக்கிறேன். இதற்கு நல்ல பலனும் கிடைத்திருக் கிறது. குறிப்பாக, கண் தானத்தில் தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக விருதுநகர் வந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் 3,100 ஜோடி கண்கள் எங்களுக்கு தானமாக கிடைத்திருக் கின்றன. இதில் எங்களுடைய பட்டாசு நகர் அரிமா சங்கத்தின் வாயிலாக மட்டும் 997 ஜோடி கண்கள் தானம் பெறப்பட்டுள்ளன.

சிவகாசியில் கண் தானம் செய்தவர்கள் இறந்தால், அவர் கண் தானம் செய்திருக்கிறார் என்பதை எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்காக, உடனடியாக அந்த வீட்டில் அதற்கான தகவல் நோட்டீஸை ஒட்டி விடுவேன். ஒவ்வொரு மாதமும் எங்களது அரிமா சங்கக் கூட்டம் நடக்கும்.

அப்போது அந்த மாதத்தில் கண் தானம் கொடுத்தவர்களின் உறவுகளை மேடைக்கு அழைத்து, கண் தானம் கொடுத்தவரின் படத்துக்கு கீழே, ’மண்ணுக்குப் போகும் விழிகளை மனிதருக்குக் கொடுத்த மாமனிதர்’ என்ற வாசகம் பதித்த ஷீல்டுகளை வழங்கி கவுரவப்படுத்துவோம். எனது மாத வருமானத் தில் பாதியை கண் தான சேவைக்காக ஒதுக்கி வைத்துவிடுவேன்... என சொல்லி முடித்தார் கணேஷ்.

இவரது கண் தான சேவையைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் இதுவரை 180 விருதுகளை வழங்கியுள்ளன. 3 கவுரவ டாக்டர் பட்டங் களையும் பெற்றுள்ளார். அத்துடன் சிவகாசி மக்கள் இவருக்கு செல்லமாக கொடுத்த பட்டம்தான் ‘கண்’ கணேஷ்.

‘‘போகும்போது யாரும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால், கண்களை தானமாக கொடுத்து விட்டுப் போனால் பலருக்கும் அதனால் பார்வை ஒளி கிடைக்கும். எனவே, கண் தானத்தின் அவசியம் குறித்து நிறைய எழுதுங்கள் சார்’’.. விடைபெறும்போது ‘கண்’ கணேஷ் நம்மிடம் வைத்த பணிவான வேண்டுகோள் இது.

SCROLL FOR NEXT