மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாததால் வெறிச்சோடி காணப்படும் 24 மணி நேர தடுப்பூசி மையம். 
தமிழகம்

வெறிச்சோடிய 24 மணி நேர கரோனா தடுப்பூசி மையம்: ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் ‘கரோனா’ தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பெரும்பாலானோர் ஆர்வம் காட்டாததால் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் 24 மணி நேர தடுப்பூசி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வம்

மருத்துவர்கள் கூறுகையில், ‘‘24 மணி நேர தடுப்பூசி மையத்தில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 530 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 2-வது டோஸ் போட சிலர் வரவில்லை. 2-வது டோஸ் போடாவிட்டால் டெல்டா போல புதுவிதமான கரோனா பரவினால் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 15 ஆயிரம் பேர் போட்டுள்ளனர். தினமும் நூறு பேர் வரை தடுப்பூசி போட்டு வருகின்றனர்." என்றனர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகையே ஆட்டிப் படைத்த ‘கரோனா’ வைரஸ் தொற்று அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் முற்றிலும் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர்.

ஆரம்பத்தில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள், தற்போது தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 24 மணி நேர தடுப்பூசி மையம் செயல்படுகிறது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல் டோஸ், 2-வது டோஸ், பூஸ்டர் தடுப்பூசி போடுகின்றனர்.

ஆனால், வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் செல்வோர் மற்றும் தடுப்பூசி ஏதாவது ஒரு காரணத்துக்காக போட வேண்டும் என்பவர்கள் மட்டுமே தற்போது வருகின்றனர்.

தற்போது பள்ளிகளிலும் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்த முகாம்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டவில்லை. அதனால் தற்போது 24 மணி நேர தடுப்பூசி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே வந்து தடுப்பூசி போடுகின்றனர். அவர்களுக்காக செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் பணிபுரிகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இதே நிலை உள்ளது.

SCROLL FOR NEXT