திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி மோசடி தொடர்பான விசாரணைக்காக, சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வழக்கறிஞர்களுடன் ஆஜரானார். படம்: எல்.சீனிவாசன்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாகக் கூறி மோசடி நடந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸிடம் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது தனிப்படைப் போலீஸார் சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் (2021 - 2026) தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, டிடிசிபி அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை வாங்கித் தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாகத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் தலைவராக இருந்தவருமான திமுக பிரமுகர் பி.டி.அரசகுமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கடந்த ஜூன் 27-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டார். இவருடன் தொடர்புடைய சுரேஷ், ராஜா ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டன. இதன் மூலம், சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு அடுத்தடுத்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. மேலும், முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் 20 வங்கிக் கணக்குகள், தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு, அவற்றில் நடைபெற்ற நிதிப் பரிவர்த்தனைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் ஏற்கெனவே நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அன்பில் மகேஸுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உதவியாளர்கள் தொடர்
புடைய இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து, வழக்கு தொடர்பாக 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 8 பென்டிரைவ்கள், 2 ஹார்டு டிஸ்க்குகள், ஒரு டேப்லெட் மற்றும் ஒரு ஆப்பிள் ஐபேட் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் இருந்து சுமார் ரூ.18 கோடி வரை மோசடி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆகஸ்ட் 18-ம் தேதி (நேற்று) காலை சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸில் நேரில் ஆஜராக வேண்டும் என அன்பில் மகேஸுக்குச் சம்மன் வழங்கப்பட்டது. இதற்கிடையில், சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை நேற்று முன்தினம் மாலை முதலே விடிய விடிய போலீஸார் ஆய்வு செய்தனர்.அதோடு, அன்பில் மகேஸிடம் கேட்பதற்காக ஏராளமான கேள்விகளை போலீஸார் தயார் செய்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், அன்பில் மகேஸ் நேற்று காலை 10.52 மணியளவில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்தார். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முதல் தளத்தில் உள்ள அவர்களது அறைக்கு (துணை ஆணையர் அறை) அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். உதவி ஆணையர் செந்தில், ஆய்வாளர் கமல் மோகன் தலைமையிலான போலீஸார் ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த கேள்விகளை கேட்டனர்.
குறிப்பாக அரசகுமார் உடனான நட்பு, தொடர்பு, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அடிப்படையாக வைத்து கேள்விகள் கேட்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அன்பில் மகேஸ் அளித்த பதில்கள் அனைத்தும் எழுத்துப் பூர்வமாகவும், வீடியோவாகவும் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணை 8 மணி நேரம் நடைபெற்றது. அன்பில் மகேஸிடம் கேட்பதற்காக 295 கேள்விகளைப் போலீஸார் தயார் செய்து வைத்திருந்தனர்.
முன்னதாக விசாரணைக்கு அன்பில் மகேஸ் ஆஜராவதை அறிந்து அவரது ஆதரவு வழக்கறிஞர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் குவிந்தனர். அவர்களைப் போலீஸார் வெளியேற்றி போலீஸ் கமிஷனர் வாயில் கதவை (3) மூடினர். உள்ளே யாரும் நுழைந்து விடாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அடுத்த வாரம் மீண்டும் விசாரணை: விசாரணை முடிந்து வெளியில் வந்த அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் பொறுமையாகப் பதில் அளித்துள்ளேன். அடுத்த வாரம் அழைக்கும் போது வர வேண்டும் என்றனர். எந்த தேதியில் கூப்பிட்டாலும் வருகிறேன் என தெரிவித்தேன்.
இந்த வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களையும் என்னிடமிருந்து பறிமுதல் செய்யவில்லை. இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. நான் எந்த தவறும் செய்யவில்லை. மீதம் உள்ள 40 கேள்விகளை அடுத்த வாரம் கேட்பார்கள் என நினைக்கிறேன். பணம் வசூல் தொடர்பாக, வழக்கில் கைதான அரசகுமார், தலைமறைவாக உள்ள முத்துக்குமார் குறித்து என்னிடம் கேட்டனர். இது தொடர்பாக அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என நான் போலீஸாரிடம் தெரிவித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.