சென்னை/மதுரை: போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 2024-ம் ஆண்டு நவ.23-ம் தேதி, அந்தமான் கடற்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகச் சென்ற மியான்மர் நாட்டைச் சேர்ந்த படகு ஒன்றை இந்திய கடலோரக் காவல் படையின் கடல்சார் உளவு விமானம் கண்டறிந்தது. கடல் மற்றும் வான்வழி ஒருங்கிணைந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் அந்தப் படகு வழிமறிக்கப்பட்டுச் சோதனையிடப்பட்டது.
அப்போது, அந்தப் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான 6,016.87 கிலோ 'மெத்தம்பெட்டமைன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இந்தச் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குத் தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நபர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த மிகப்பெரிய சட்டவிரோதப் போதைப்பொருள் வலையமைப்பைக் கண்டறிந்து முழுமையாக அழிப்பதற்காகத் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது.
விசாரணையின் தொடர்ச்சியாக, மிசோரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரையில் 8 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
சென்னையில் நந்தனம் சிஐடி நகரில் வசிக்கும் தோல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிபர் இக்பால் என்பவரது வீட்டில், மத்திய துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வண்ணாரப்பேட்டை மின்ட் மார்டன் சிட்டியில் வசித்து வரும் அபூபக்கர் கனி சித்திக் என்பவரது வீட்டிலும், அந்தப் பகுதி கட்டிட உரிமையாளரின் போரூர் வீட்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தாம்பரம் அருகே பெரும்பாக்கம் இந்திரா பிரியதர்ஷினி நகரில் வசிக்கும் சார்லஸ் ஜோசப் ரெட்டி என்பவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவருடன் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் துணி வியாபாரி அமீர் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடந்தது.
இதேபோல், மதுரை மாவட்டம் பெருங்குடியை சேர்ந்த, மணிப்பூர் மாநிலத்தில் தொழில் செய்து வரும் தொழிலதிபர் பாலமுருகன் என்பவரது வீட்டுக்கு அதிகாலை 5.30 மணிக்குச் சென்ற 4 பேர் கொண்ட என்ஐஏ குழுவினர், அவர் வீட்டில் இல்லாததால் அவரது மனைவி முருகேஸ்வரியிடம் 30 நிமிடங்களுக்கும் மேலாக விசாரணை நடத்திச் சில முக்கியத் தகவல்களைச் சேகரித்தனர்.
சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற இந்தச் சோதனைகளின்போது, டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சோதனைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்கள் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.