தமிழகம்

பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா தேர் பவனி

செய்திப்பிரிவு

பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு நேற்றிரவு பூண்டி மாதாவின் தேர் பவனி நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற்ற நவநாட்களில் திருப்பலி பூஜைகளை அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர்.

இதையடுத்து, விழாவின் முக்கிய நாளான நேற்று மாலை, பூண்டி மாதா பேராலயத்தின் முன்னாள் பங்குத் தந்தையர்கள் லூர்துசேவியர், ராயப்பர் ஆகியோரின் நினைவுத் திருப்பலி பூஜைகள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், மாலை 6.30 மணிக்கு குடந்தை மறைமாவட்ட ஆயர் எப்.அந்தோனிசாமி திருவிழா கூட்டுத்திருப்பலி பூஜையை நடத்தி மறையுரையாற்றி, ஆசி வழங்கினார். தொடர்ந்து, இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூண்டி மாதாவின் அலங்கார தேர் பவனியை ஆயர் புனிதப்படுத்தி தொடங்கி வைத்தார். அப்போது கூடியிருந்தமக்கள் நூற்றுக்கணக்கானோர், ‘பூண்டி அன்னையே வாழ்க, மாதாவே வாழ்க' என முழக்கங்களை எழுப்பினர்.

விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேர் பவனியில் பூண்டி மாதா பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான ஏ.பாக்கியசாமி, துணை அதிபர் ஜெ.ரூபன்அந்தோனிராஜ், பூண்டி மாதா தியான மைய இயக்குநர் பி.ஜெ.சாம்சன், உதவித்தந்தையர் எ.இனிகோ, எஸ்.ஜான்சன், ஆன்மிக தந்தை அருளானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டுப்பள்ளி போலீஸார் செய்திருந்தனர்.

தொடர்ந்து, இன்று(மே 15) காலை 6 மணிக்கு குடந்தை மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறும் திருப்பலி பூஜையில் சுற்றுவட்ட பங்கு குருமார்கள், இறைமக்கள் கலந்துகொள்கின்றனர். பின்னர், மாலை கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT